நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து திமுகவை சேர்ந்த பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவரை நீக்கிவிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகர்மன்ற உறுப்பினரை துணைத்தலைவர் ஆக்குவோம் என திமுக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் நகர்மன்ற துணைத்தலைவர் பதவி திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியின் அறிவிப்பை மீறி துணைத்தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 26வது வார்டில் வெற்றி பெற்ற ராஜாமுகமது தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு ஐந்து நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் பெரியகுளம் நகர்மன்றத் துணைத் தலைவராக வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் ராஜாமுகமது ராஜினாமா செய்யவில்லை.
இதனால், பெரியகுளம் நகராட்சியின் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியில் தேர்வான ராஜா முகமதுவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நீக்கிவிட்டு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அக்கட்சியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை நகர்மன்றத் துணைத் தலைவராக ஆக்குவேன் என பெரியகுளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரான திமுக நகரச் செயலாளர் முரளி தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெரியகுளம் நகர்மன்றத் துணைத் தலைவராக வெற்றி பெற்ற ராஜாமுகமது, ராஜினாமா செய்யக்கோரி தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM