மும்பை பங்குச்சந்தையைப் பிப்ரவரி மாதத்தில் இருந்து கரடியின் பிடியில் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறது. குறிப்பாகக் கடந்த 4 நாளில் மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பதவி செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆனால் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் முடிந்த காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் 7ஆம் தேதி வரையில் இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் சுமார் 29 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சந்தை முதலீட்டை இழந்துள்ளனர்.
சரி இந்திய சந்தையைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் எது தெரியுமா..?!
கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் உடன் இணைந்து ரஷ்யா கச்சா எண்ணெய்க்குத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது, இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று கோல்டுமேன் சாச்சிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கச்சா எண்ணெய் 135 டாலர் வரையில் உயரும் என அறிவித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி உயர்வு குறித்த பயம் ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மேலும் அமெரிக்காவின் வலிமையான வேலைவாய்ப்புத் தரவுகள் வட்டி விகித உயர்வுக்குக் கூடுதலான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் 5 முறை வட்டியை உயர்த்தும் என அந்நாட்டு முன்னணி வங்கிகளில் ஒன்றான வெல்ஸ் பார்கோ கேரி தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 76.96 ஆகச் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மும்பை பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடுகளும் தான்.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பின் வட்டி விகிதம் உயர்வு தான் பங்குச்சந்தை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு அடிப்படை காரணம், மற்ற அனைத்தும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலிகள் தான்.
இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
அன்னிய முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) மார்ச் 2 முதல் மார்ச் 4 வரையிலான 3 நாட்களில் மட்டும் பங்குச்சந்தையில் இருந்து ரூ.14,721 கோடியும், கடன் சந்தை இருந்து ரூ.2,808 கோடியும், ஹைப்ரிட் கருவிகளில் இருந்து ரூ.9 கோடியும் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளதாக டெபாசிட்டரிகளின் தரவுகள் கூறுகின்றன.
2022 பிப்ரவரி
2022 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவைத் தவிர, வளர்ந்து வரும் சந்தைகளில் FPI-க்களின் முதலீடுகள் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. பிப்ரவரி மாதம் இந்தோனேஷியா 1,220 மில்லியன் டாலர், பிலிப்பைன்ஸ் 141 மில்லியன் டாலர், தென் கொரியா 418 மில்லியன் டாலர் மற்றும் தாய்லாந்து 1,931 மில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் 4 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை மீண்டு உள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு 581.34 புள்ளிகள் உயர்ந்து 53,424.09 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 150.30 புள்ளிகள் உயர்ந்து 16,013.45 புள்ளிகளை எட்டியுள்ளது.
Indian Investors lost Rs 29 lakh crore since February
Indian Investors lost Rs 29 lakh crore since February 29 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்.. என்ன காரணம்..?!