புதுடெல்லி: போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இப்போது ‘ஆபரேஷன்கங்கா’ திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்படுவதைப் போலவேகடந்த காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை மீட்க ருமேனியா,போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 76 விமானங்கள் அனுப்பப்பட்டன. இதேபோல, சமீப காலங்களில் இந்தியா மேற்கொண்ட மற்ற முக்கிய மீட்பு நடவடிக்கைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
1990-ல், வி.பி. சிங் தலைமையிலான அரசு வளைகுடா போரின்போது இந்தியர்களின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக 1.7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களை வளைகுடா பகுதியில் இருந்து மீட்டன. 2006-ல் இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போர் மூண்டபோது, ‘ஆபரேஷன் சுகூன்’ நடவடிக்கை மூலம் இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்திய வாழ்க்கையைத் துணையைக் கொண்ட லெபனான் குடிமக்கள் என 1,764 இந்தியர்கள் உட்பட 2,280 பேர் மீட்கப்பட்டனர்.
2011-ம் ஆண்டில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக உள்நாட்டுப் போர் வெடித்தபோது, ‘ஆபரேஷன் சேஃப் ஹோம்கமிங்’ என்ற நடவடிக்கை மூலம் லிபியாவின் திரிபோலி மற்றும் சபா, எகிப்தின் அலெக்சாண்டிரியா மற்றும் மால்டா ஆகிய இடங்களில் இருந்து 15,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்களில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். 2015-ம் ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து ‘ஆபரேஷன் ரஹாட்’ நடவடிக்கை மூலம் சுமார் 4,000 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.