சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்படுகின்றன.
இது குறித்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனரும், இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்க ஆலோசகருமான மயில்சாமி அண்ணாதுரை சென்னையில் அளித்த பேட்டி: இந்திய விண்வெளித் துறை மிகப் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள கல்லுாரி, பல்கலை மாணவர்கள் தயாரிக்கும், 75 சிறிய செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அவை, இஸ்ரோவின் ராக்கெட் வாயிலாக, வரும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விண்ணில் செலுத்தப்படும்.
ஒரு செயற்கைக்கோள் 1.5 கிலோ எடை இருக்கும். அவற்றில் இருந்து தகவல் தொடர்பு விபரங்கள் பெறப்படும். மாணவர்கள் கல்லுாரியில் படிக்கும்போதே, செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, செயற்கைக்கோள் துறையில் இந்தியா விரைந்து முன்னேறும். அதில், பள்ளி மாணவர்களும் பங்கேற்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு செயற்கைக்கோள், தரை கட்டுப்பாட்டு மையம் அமைக்க, 80 லட்சம் ரூபாய் செலவாகும். அரசு பல்கலை, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் 75 செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்ட இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்திற்காக, இந்திய தொழில் நுட்ப காங்கிரஸ் சங்கம், 150 பல்கலை, கல்லுாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களின் விண்வெளி திட்டம் கண் முன் நனவாவதைக் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement