விருதுநகர், அணைத்தளப்பட்டி பள்ளி மற்றும் சமுதாயநலக் கூடத்தின் கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உடனடியாக நீக்கவும் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “அணைத்தளப்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண் 534/1, 534/2 ஆகிய பகுதிகள் குறிப்பிட்ட(நாயக்கர்) சமுதாயத்தினரின் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அவற்றில் சில பகுதியை விவசாயத்திற்கான உரம் தயாரிப்பதற்கான இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்தப் பகுதி காலியிடம் என பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள இடங்களில் அரசுப் பள்ளி, கோவில் கட்டப்பட்டும், விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்று சமூகத்தை(தேவர்) சேர்ந்தவர்கள், இந்த இடங்களை எங்கள் சமூகத்தினர் பயன்படுத்த தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகின்றனர். கோவில், பள்ளி உள்ளிட்ட இடங்களில் நுழைய அனுமதிப்பதில்லை. மாற்று சமூகத்தினரின் தரப்பில் அந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக திட்டமிட்டு இதுபோல இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிவகாசியின் வருவாய் மண்டல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்காமல் சாதி பிரச்சினையை உருவாக்க முயல்வது போல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அணைத்தளப்பட்டி கிராமத்தில் மாற்று சமூகத்தினர்(தேவர்) சார்பில் சமுதாய கூடம் கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ”அரசுப்பள்ளி மற்றும் அங்கிருக்கும் சமுதாய நலக்கூடத்தின் கேட்டில் உபயம் என மாற்று சமூகத்தினரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோல இடையூறுகளை செய்து வருகின்றனர். ஆகவே, மாற்று சமூகத்தினர் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அனுமதிக்க கூடாது” என வாதிடப்பட்டது. அதற்கான புகைப்படங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கு, “பொது இடத்தின் நுழைவு வாயிலில் எவ்வாறு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் பயன்படுத்தப்படுகிறது?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, பள்ளி மற்றும் சமுதாயக்கூடத்தின் கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உடனடியாக நீக்கவும் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM