திருப்பதி:
லிதிவேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக கோவா செல்வதற்காக ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவருடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் அடுத்த வெங்கடபாளையத்தை சேர்ந்த சாய்குமார் என்ற வாலிபர் பயணம் செய்தார்.
அப்போது இளம்பெண் பஸ் டிக்கெட்டிற்கு தனது நாட்டு கரன்சியை கொடுத்தார். இதனை கண்ட பஸ் கண்டக்டர் வெளிநாட்டு கரன்சியை வாங்க முடியாது.
இந்திய நாட்டு பணமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இளம்பெண்ணிடம் இந்திய நாட்டு பணம் இல்லாததால் தவித்தார். இதனைக்கண்ட சாய்குமார் தன்னிடமிருந்த பணத்தை பஸ் டிக்கெட்டிற்கு கொடுத்தார்.
இதனால் இளம்பெண்ணிற்கும், சாய்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதையடுத்து சாய்குமார் இளம்பெண்ணை தன்னுடைய சொந்த ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தனது கிராமம் அழகாக இருக்கும் என்று கூறினார். மேலும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றி தருவதாகவும் கூறினார்.
இதையடுத்து வெளிநாட்டு பெண்ணும் அவரது கிராமத்திற்கு வருவதாக தெரிவித்தார். சாய்குமார் அந்த பெண்ணை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து சென்று குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இளம்பெண்ணை தன்னுடைய வீட்டில் தங்க வைத்து சாப்பாடு வழங்கினார்.
இதையடுத்து இளம்பெண்ணிடம் உள்ள வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றி தருவதாக கூறி இளம்பெண்ணை தன்னுடன் பைக்கில் அழைத்து சென்றார். அப்போது கூடுதுறை சேர்ந்த ஷேக் அபித் என்பவரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
3 பேரும் சைதாபுரம் அடுத்த ராவூர் வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து சாய்குமார், ஷேக் அபித் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அவர்களிடம் சண்டையிட்டு தப்பிய வெளிநாட்டு இளம்பெண் வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடிவந்து கத்தி கூச்சலிட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இளம்பெண்ணை மீட்டு சைதாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் வாலிபர்களை வனப் பகுதியில் தேடினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சாய்குமார், ஷேக் அபித் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளாரர்.
இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை ஆந்திராவில் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட அவமானம் ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
எனவே வெளிநாட்டு பெண்ணிற்கு நியாயம் வழங்க கைதான 2 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.