மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்று விமர்சையாக நடைபெறவுள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமலும், மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள் விழாவாகவும், தேரோட்டம் நடைபெறாமலும் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடைபெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு வழக்கமான விமர்சையோடு நடத்த திட்டமிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வும், 12ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக் விஜயம்,14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நிகழ்வும் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், 16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM