ரஷ்ய அதிபர் புடினுக்கும்,
உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கிக்கும் பிரதமர்
நரேந்திர மோடி
போட்ட போன் கால்களால், சுமி நகரிலிருந்து இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் பல முக்கிய நகரங்களில் இந்தியர்கள் படிக்கிறார்கள். இவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு அருகில் உள்ள போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்து சேருகிறார்கள். அங்கிருந்து இந்திய அரசு அனுப்பி வைத்துள்ள விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சுமி என்ற நகரில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்க கடந்த சில நாட்களாக தொடர் முயற்சிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் இவர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக தலையிட நேரிட்டது. ரஷ்ய அதிபருக்கும்,
உக்ரைன்
அதிபருக்கும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இவர்கள் பத்திரமாக அங்கிருந்து வெளியேற உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது இந்த மாணவர்கள் சுமியிலிருந்து வெளியேற வழி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பஸ்கள் மூலம் இந்த இந்தியர்கள் சுமியிலிருந்து கிளம்பி மத்திய உக்ரைனில் உள்ள போல்டாவா என்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பாக்சி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வாலாட்டினால்.. மோடி சுளுக்கெடுப்பார்.. அமெரிக்கா எச்சரிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டிவீட்டில், சுமியில் சிக்கியிருந்த அனைத்து இந்திய மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனற். அனைவரும் போல்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து ரயில்கள் மூலம் மேற்கு உக்ரைன் கொண்டு செல்லப்பட்டு தாயகம் திரும்புவார் என்று கூறியிருந்தார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன், அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேசி வந்தார்.
முன்னதாக சுமி நகரில் உள்ள இந்தியர்கள் தாங்கள் மிகவும் சிரமமான நிலையில் இருப்பதாகவும், சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்படுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தனர். தங்களது உயிரைப் பணயம் வைத்து, தேசியக் கொடியை மட்டும் நம்பி நடந்தே எல்லைக்குப் போகப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதனால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது. சுமி இந்தியர்களை மீட்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து பிரதமரே இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்தியர்கள், பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.
முதலில் திங்கள்கிழமை அவர்கள் மீட்கப்படுவதாக இருந்தது. ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து நேற்று அனைவரும் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.