ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கூட 14 ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளாய் சிறையில் இருக்கிறார்” என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதையடுத்து, “ஏழு பேரின் விடுதலை தொடர்பான விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும்போது, தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. குடியரசுத் தலைவர் தனது 72-வது அரசியலமைப்பு பிரிவின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும். கருணை மனு மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” என்ற தன் நிலைப்பாட்டை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரியிருந்தார். இந்த நிலையில், நீதிமன்றம் அவரின் நடத்தை, நோய் பாதிப்பு தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது.