கீவ்: 8 வயது ஆலிஸ் ஏன் தெருவில் உயிரிழந்தாள்.. ! இப்படித் தலைப்பிட்டு உலக ஊடகங்களுக்கு உக்ரைனின் முதல் குடிமகள் (அதிபரின் மனைவி) ஒலீனா ஜெலன்ஸ்கா ஒரு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 14 வது நாளை எட்டியுள்ள நிலையில் ஜெலன்ஸ்கா இந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரை உக்ரைன் மீதான போர் குறித்து அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி மட்டுமே வீடியோக்கள், ட்வீட்கள், அறிக்கைகள் என்று அளித்துவந்தார். இந்நிலையில் முதல் குடிமகளின் முதல் அறிக்கை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அவரது கடிதத்தின் விவரம்: பிப்ரவரி 24 ஆம் தேதி காலையில் கண்விழிக்கும்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது என்ற தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ டாங்குகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்தன. அவர்களின் விமானங்கள் எங்கள் வான்பரப்பில் நுழைந்தன. ஏவுகணை லாஞ்சர்கள் எங்கள் நகரங்களை சுற்றிவளைத்தன.
க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், இன்று உக்ரைன் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொலை செய்யப்படுகின்றனர். குழந்தைகள் கொலை செய்யப்படுவது தான் மிகுந்த வேதனையான விஷயம். 8 வயது ஆலிஸ் தெருவில் இறந்து கிடந்தாள். கீவ் நகரில் பொலினா தனது பெற்றோருடன் உயிர் நீத்தாள். 14 வயது ஆர்சென்லி ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட இடிபாட்டில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தான்.
பொதுமக்களுக்கு எதிரான போர் இல்லை என்று ரஷ்யா கூறிவருகிறது. அப்படியென்றால் இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு என்ன அர்த்தம். இந்தப் போர் எங்கள் மக்கள் மீதான போர். எங்கள் நாட்டின் தெருக்கள் அகதிகளால் நிரம்பி வழிகிறது. எம் நாட்டுப் பெண்களின் கண்களில் தெரியும் சோர்வையும், குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு செல்லும் அவர்கள் இதயத்தின் வலியையும் பாருங்கள். தங்கள் அன்புக்குரியவர்களை விட்டுவிட்டு அப்பெண்கள் அகதிகளாகச் செல்கின்றனர்.
இந்தப் போருக்கு இடையே பதுங்கு குழியில் இருப்பவர்கள் இன்சுலின் செலுத்திக் கொள்ள முடியுமா? இல்லை ஆஸ்துமா மருந்தை நெருப்புப் பிழம்புகளுக்கு இடையே சென்று எங்காவது வாங்க முடியுமா? யாருக்காவது அதிகாரம் இருந்தால் எங்கள் வான் எல்லையை நோ ஃப்ளை ஜோனாக அறிவியுங்கள்.
இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகள், பேஸ்மென்ட்டின் மேற்கூரையையே முதலில் பார்க்கின்றன. அடித்தளத்தில் இருக்கும் இறுக்கமான காற்றையே சுவாசிக்கின்றன. அந்தக் குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம் தான் வரவேற்றுள்ளது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர். ஆகையால் இந்தப் போர் எங்கள் பொதுமக்கள் மீதே நடத்தப்படுகிறது.
இவ்வாறு லெலன்ஸ்கா அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
அந்தக் கடிதத்திற்கு I Testify.. நான் சாட்சி சொல்கிறேன் என்று அவர் பெயரிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள மடல் வைரலாகி வருகிறது.
அவரின் கடிதத்தை உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அரசு, அவரும் அவரது இரு குழந்தைகளும் இன்னமும் கீவ் நகரில் தான் இருக்கிறார்களா என்பதை மட்டும் உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் அதிபர் காமெடி நடிகராக இருந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் நடிகராக இருந்தபோது ஒலீனா ஜெலன்ஸ்கா அவருக்கான ஸ்க்ரிப்ட்டுகளை எழுதிக் கொடுத்து வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் தரமான உணவை உறுதி செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் ஒலீனா என்பது குறிப்பிடத்தக்கது.