கொத்துக் கொத்தாக குழந்தைகளைக் கொன்று குவிக்கிறார்கள் ரஷ்யப் படையினர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி
ஒலினா ஜெலன்ஸ்கா
அறிக்கை விடுத்துள்ளார்.
உலக ஊடகங்களுக்கு அவர் பகிரங்க கடிதமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவி பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை ரஷ்யப் படையினர் கொன்று குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக ஒலினா ஜெலன்ஸ்கா இன்ஸ்டாகிராம் மூலமாக விடுத்துள்ள அறிக்கை:
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைன் குழந்தைகளைக் கொன்றுக் குவிக்கிறார்கள். வேண்டும் என்றே செய்கிறார்கள். விஷமத்தனத்துடன் செய்கிறார்கள். மரியுபோல் நகரில் பிறந்து 18 மாதமேயான கிரில் என்ற சிறுவன் குண்டு வீச்சில் காயமடைந்தான். அவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
ஓக்திர்கா நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆலிஸ். குண்டு வீச்சில் படுகாயமடைந்தாள். அவளது தாத்தா ஆலிஸைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் படுகாயமடைந்தார். ஆலிஸைக் காப்பாற்ற முடியவில்லை. நடுத் தெருவிலேயே அவளது உயிர் பிரிந்தது.
கீவ் நகரைச் சேர்ந்த பொலினா. தலைநகரத்து தெருவில் குண்டு வீச்சில் பரிதாபமாக உயிரிழந்துள்ளாள். அவளது பெற்றோர், சகோதரர் ஆகியோரும் இறந்து போய் விட்டனர். அவளது சகோதரி மட்டும் உயிர் பிழைத்து அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உக்ரைன் படையினருடன் இணைந்த தமிழ் மாணவர்.. அதிர்ச்சியில் கோவை.. துயரத்தில் பெற்றோர்!
14 வயது ஆர்செனி, 6 வயது சோபியா.. என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. உக்ரைனில் ஏற்கனவே குறைந்தது 38 சிறார்கள், ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். ஒவ்வொரு நாளும் அமைதியான நகரங்கள் சீர்குலைந்து வருகின்றன. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள், அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்துக் கொல்கின்றனர்.
இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள். ரஷ்யப் படையினரிடம் இதைப் போய்க் காட்டுங்கள். அவர்களிடம் தாக்குதலை நிறுத்துமாறு கூறுங்கள். இதுதான் மனிதாபிமானமா?
உக்ரைனில் உள்ள அனைத்து நகரங்களிலும் மனிதாபிமான முறையில் மக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான சிறார்கள் ஏற்கனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்த்தளத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கார் பார்க்கிங்குகள் மருத்துவமனைகளாக, வார்டுகளாக, படுக்கும் இடங்களாக மாறியுள்ளன. கட்டடத்தை விட்டு வெளியேறுவோர் மீது ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். யாராவது உதவ வந்தால் அவர்களையும் தாக்குகிறார்கள்.
ஒரே மேடையில் காட்சி தந்த மமதா பானர்ஜி – பிகே.. சண்டை முடிஞ்சிருச்சா?.. அப்ப ஓகே!
உலக ஊடகங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த கொடூரமான உண்மையை உலகுக்கு தெரிவியுங்கள். ரஷ்யர்கள், உக்ரைன் குழந்தைகளைக் கொல்கின்றனர். இதை ரஷ்ய தாய்மார்களிடம் சொல்லுங்கள். அவர்களது பிள்ளைகள், உக்ரைன் குழந்தைகளைக் கொல்வதைத் தெரிவியுங்கள்.
இந்தப் புகைப்படங்களை ரஷ்யப் பெண்களிடம் காட்டுங்கள். உங்களது கணவர்கள், சகோதரர்கள் அப்பாவி உக்ரைன் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்று அவர்களுக்கு சொல்லுங்கள். உவ்வொரு ரஷ்ய வீரரும் போர்க்குற்றம் புரிந்து வருவதை தெரிவியுங்கள்.
வெட்கமில்லாத அமெரிக்கா.. எண்ணெய்க்காக எதிரி வெனிசூலாவின் காலில் விழுந்த பரிதாபம்!
நேட்டோ நாடுகளே.. உக்ரைன் வான்வெளியை மூடுங்கள். எங்களது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். நாளை இது உங்களுக்கும் நடக்கலாம் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த, காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்களை போட்டுள்ளார். ஒவ்வொரு பதிவும் உருக்கமாக இருக்கிறது.
2 குழந்தைகளுக்குத் தாயான 44 வயது ஜெலன்ஸ்கா, உக்ரைன் மக்களுக்கு உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது ஒலினா ஜெலன்ஸ்கா கீவ் நகரில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.