வாஷிங்டன்,
2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 549 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இறுதியாக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ளார்.
அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் ரோஸ்வெல் நகரை சேர்ந்தவர் டானல் ஹண்டர் (வயது 43). இவருக்கும் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
வைரஸ் பாதிக்கப்பட்ட ஹண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தபோதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்.
ஹண்டர் மொத்தம் 9 மருத்துவமனைகளில் மொத்தம் ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சை பெற்றுள்ளார். சரியாக 549 நாட்கள் மருத்துவமனையில் ஹண்டர் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த ஒன்றரை ஆண்டுகளும் ஹண்டர் தனது குடும்பத்தினரை சந்திக்கவில்லை. ஹண்டரில் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே நின்றவாறு கண்ணாடி ஜன்னல் வழியாக அவரை பார்த்து சென்றனர்.
இதனை தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பின் ஹண்டர் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். 549 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் குணமடைந்த ஹண்டர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகள் குடும்பத்தினர் யாரையும் நேரில் சந்திக்காமல் மருத்துவமனையில் இருந்த ஹண்டர் தற்போது தனது குடும்பத்தினரை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.