ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனங்கள்
மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன.
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சுற்றுலா அமைப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் அமைப்பில் இருந்து ரஷ்யாவின் உறுப்பினர் பதவியை நீக்க ஐ.நா.வின் சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. விரைவில் இதுதொடர்பான வாக்கெடுப்பை அந்த அமைப்பு நடத்தவுள்ளது.
சுமி நகரில் இருந்து மாணவர்கள் மீட்பு
உக்ரைனின் சுமி நகரில் குடிநீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை இந்தியத் தூதரகக் குழு பேருந்துகள் மூலம் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றியது. இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். மாணவர்கள் விரைவில் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
மனநல ஆலோசனை மையம்
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம் சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைக்கிறார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்க தடை விதித்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 127 டாலர் வரை அதிகரித்துள்ளது.
ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் ரஷ்யாவிற்கான தனது ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகளை தற்காலிகமாக மூடுவதாக மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், அந்நாட்டில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 62,000 ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும்; ஆயுதம் மனிதனின் நாகரிகம், போர் அநாகரிகம்; போரை நிறுத்துங்கள் புதின் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் சுமார் 210 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஊழியர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தொடர்ந்து பணியில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. செர்னோபில் அணுசக்தி தரவு அமைப்புகளுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் IAEA கூறியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
உக்ரைனுக்கு அளிப்பதற்காக ரஷ்ய தயாரிப்பு போர் விமானத்தை ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்துக்கு வழங்க நேட்டோ நாடான போலந்து முன்வந்தது. எனினும் அந்நாட்டின் உதவியை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினை் இஸ்ரேல் பிரதமர் 2ஆவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் விவகாரம் குறித்து புதினுடன் பென்னட் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.