புதுச்சேரி-அண்ணா நகர் எதிரில் ரூ. 1.75 கோடி மதிப்பில், பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் சிறு பாலம் கட்டும் பணி நேற்று நள்ளிரவு துவங்கியது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் மேட்டு வாய்க்கால், ரெட்டியார்பாளையம், பூமியான்பேட்டை, இந்திரா சிக்னல், அண்ணா நகர், அய்யனார் நகர் வழியாக உப்பனாற்றில் கலக்கிறது.மழைநீர் வடியும் முக்கிய வாய்க்காலான இதில், பூமியான்பேட்டை மற்றும் அண்ணா நகர் எதிரில் சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்கால் துார்ந்து போனது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.அதையடுத்து, மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் பூமியான்பேட்டை சந்திப்பில், ரூ. 66 லட்சம் மதிப்பில், ‘பிரிகாஸ்ட்’ முறையில் சிறிய பாலம் கட்டப்பட்டது.அதுபோல், நெல்லித்தோப்பு அண்ணா நகர் எதிரில் சாலையின் குறுக்கே, 27 மீட்டருக்கு சிறிய பாலம் கட்டும் பணி ரூ. 1.75 கோடி மதிப்பில் துவங்கி உள்ளது.அதையொட்டி, ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சாய்தளம் போன்ற அமைப்பை நேற்று இரவு இடித்து அகற்றினர். இன்று, பாலத்திற்கான அடிதளம் அமைக்கப்பட உள்ளது.பிரிகாஸ்ட் முறையில் தயாரித்து வைத்துள்ள 27 கான்கிரீட் பாக்ஸ்களை பயன்படுத்தி சிறு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement