தேசிய அளவிலும், மாநிலங்களிலும் பாஜக இன்று எப்படி அசுர பலத்துடன் உள்ளதோ இதேபோன்றுதான் நேரு, இந்திரா ராஜீவ் காலம் வரை காங்கிரஸும் மத்தியிலும், மாநிலங்களிலும் கோலோச்சி இருந்தது.
காங்கிரசின் கை ஓங்கியிருந்த அந்த காலத்திலேயே அதன் முதல் வீழ்ச்சி 1967 இல் தமிழகத்தில் தொடங்கியது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அதுநாள்வரை மக்களவைத் தேர்தலோ, மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலோ பெரும்பாலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று கொண்டிருந்தது. காங்கிரசின் அந்த 20 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநில கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று நிரூபித்த திமுக, அன்று ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
திமுக தொடக்கி வைத்த மாநில அரசுகளின் இந்த சாதனைப் பயணத்தை அதன் பின்னர் 90களில் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தொடர்ந்தார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும்வரை, நாட்டின் மிக்ப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் அங்கும் வீழ ஆரம்பித்தது. மாயாவதிக்கு பின் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் என சமாஜ்வாதி கட்சியின் சாம்ராஜியத்திலும் மெல்ல, மெல்ல தேய்ந்து வந்த காங்கிரஸ், தற்போது பாஜகவின் ஆதிக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் டோட்டலாக வாஷ் அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தெற்கிலும், வடக்கிலும் இந்த நிலைமையென்றால் கிழக்கில் காங்கிரஸை கதறவிட்ட பெருமை, தாய் கழகமான காங்கிரசில் இருந்து வெளிவந்து உதயமான புதிய கட்சியான திரிணாமூல் காங்கிரஸையே சாரும். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Vs காங்கிரஸ் என்றிருந்த அந்த மாநில அரசியல், 21 ஆம் நூற்றாண்டில் மமதாவின் வருகைக்கு பின் திரிணாமூல் காங்கிரஸ் Vs பாஜக என மொத்தமாக மாறிவிட்டது. அது சட்டமன்ற தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ மேற்கு வங்கத்தில் இப்போதெல்லாம் போட்டியில் காங்கிரஸ் இல்லைவே இல்லை என்பதுதான் உண்மை.
சரி… கிழக்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சுழற்றி, சுழற்றி அடிக்கப்பட்டு வந்த நிலையில், ஆறுதலான விஷயமாக தலைநகர் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. அங்கும் 2013 இல் காங்கிரஸு்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதுநாள்வரை அங்கு தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சி புரிந்த லந்த காங்கிரஸை துடைத்தெறிந்தது அரவிந்த் கெஜ்ரிவாலின்
ஆம் ஆத்மி
கட்சி.
ஆம் ஆத்மியால் காங்கிரஸுக்கு டெல்லியில் அன்று நேர்ந்த பின்னடைவு இன்று பஞ்சாப் வரை தொடர்கிறது. வேளாண் சட்டத் திருத்த மசோதாக்கள கொண்டு வந்த தீருவோம் என்று மத்திய பாஜக அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருந்ததால் அக்கட்சிக்கு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் சம்மட்டி அடி விழும் என்று தெரியும்.
ஆனால், பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்திருநத வேண்டிய காங்கிரஸ், சொல்லிக் கொள்ளும்படியாக இருந்த பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் இழந்து பரிதாப நிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தல், மாநில சட்டமன்ற தேர்தல்கள் என இப்படி தொடர் தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ், மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோனியா, ராகுல் உடனடியாக எடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் 2024 இல் காங்கிரசின் கை மொத்தமாக மறையும் நிலை ஏற்படக்கூடும்.