புதுடெல்லி: அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி நிலங்களை விற்று பணமாக்குவதற்காக புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டிடங்களை விற்று பணமாக்குவதற்காக தனி அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதன் முடிவில், தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி) எனப்படும் புதிய அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்கள், பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை விற்பது அல்லது குத்தகைக்கு விட்டு பணமாக மாற்றி, அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டப்பட உள்ளது. இதற்கு முன், என்எம்பி எனப்படும் அமைப்பின் மூலம் ரயில்வே, மின்சாரம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அரசு வருவாய் ஈட்டி வந்தது. தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி) ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.