கான்பெரா:ஆஸ்திரேலியாவில் தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதிகளில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.குயின்ஸ்லாந்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில், ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழையில், 80 சதவீத மழை இப்போதே பதிவாகி உள்ளது.
இதேபோல், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில், இதுவரை பெய்யாத அளவுக்கு அதிக மழை பதிவாகி உள்ளது. இங்குள்ள லிஸ்மோர், கிளாரன்ஸ் பள்ளத்தாக்கு, ரிச்மாண்ட் பள்ளத்தாக்கு பகுதிகளில், நிலச்சரிவு போன்ற மோசமான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்து களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 22 ஆக உயர்ந்துள்ளது; பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த பேரிடரால், நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement