உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
பாஜகவின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி. இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
இந்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள், இந்த ஆண்டின் ஹோலி பண்டிகை இன்றே தொடங்கிவிட்டது. தேர்தலில் வெற்றியை வசப்படுத்திய பாஜக செயல்வீரர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டிலும் தொடர்ந்த இரண்டாவது முறை வென்று பாஜக அங்கு புதிய வரலாறு படைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறோம்.
2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு 2017 உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அதனை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டன என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.. அதேபோல், நான்கு மாநில தேர்தலில் பாஜக தற்போது பெற்றுள்ள வெற்றி 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.