வாஷிங்டன்:’கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய – பசிபிக் பிராந்திய நிலவரம் குறித்து ஆராய, அமெரிக்க பார்லி.,யில் ஆயுத சேவைகள் குழு கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்காவின் இந்திய – பசிபிக் பிராந்திய கமாண்டர் அட்மிரல் ஜான் அக்யுலினோ பேசியதாவது:இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சீனா எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எல்லைப் பிரச்னைகளுக்கு படை பலத்தை பயன்படுத்தி தீர்வு காணவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் இந்திய – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ராணுவ இணையமைச்சர் எலைய் ராட்னர் கூறியதாவது:இந்தியா பல ஆண்டுகளாக தன் எல்லையோரத்தில் சீனாவின் அத்துமீறல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு தேவையான புலனாய்வு தகவல்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவம் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நம் முயற்சிகளுக்கு இந்தியா உதவத் தயாராக இருக்க வேண்டும். அதுபோல, நாமும் இந்தியாவுக்கு உதவ தயார் நிலையில் இருக்க வேண்டும். இக்கருத்தை இந்தியா உள்ளிட்ட பல நட்பு நாடுகளுடனான ராணுவ மட்ட பேச்சில் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement