சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று நடிகர் கமல்ஹாசனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காலங்காலமாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்களும் இதர பகுதி மீனவர்களும் ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் குடும்பங்களைப் பிரிந்து பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து வருபவர்கள் இவர்கள். இந்த நிலையில் அந்தமானுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தூத்தூரைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 5 பேர் இந்தோனேசியா அரசால் கைது செய்யப்பட்டுள்ள செய்தியும், கன்னியாகுமரியைச் சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் செஷல்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
அந்தமான் பகுதியில் மீன்பிடித்து வந்த 5 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இந்தோனேசிய அரசால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதே காரணங்களுக்காக அரபிக் கடலில் மீன்பிடித்து வந்த 32 தமிழக மீனவர்களும் செஷல்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இலங்கை கடல் எல்லையில் இன்னல்களை சந்தித்து வரும் நம் மீனவர்கள் மத்தியில் இந்த செய்தி புதியதொரு இடியாக இறங்கியிருக்கிறது.
எந்தப் பிரச்சனைக்கும் மத்திய மாநில அரசுகள் இதுவரை நிரந்தர தீர்வு காணாத நிலையில் இப்பொழுது இந்தோனேசிய மற்றும் செஷல்ஸ் அரசுகளால் கைது செய்யப்பட்டுள்ளது, ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குகிறது. மீனவ குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் அச்சத்தை போக்கும் வண்ணம் அயல்நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் நம் மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது.