உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றி பெற செய்த மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேச மாநிலம் தான். இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை அலங்கரிக்கும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால், மத்தியில் ஆட்சியை எளிதில் பிடித்து விடலாம் என்ற எழுதப்படாத விதி உள்ளதால் அரசியல் கட்சிகள் கடுமையாக தேர்தலில் மல்லுக்கட்டும். உத்தர பிரதேச மாநிலத்தில், 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும்
பாஜக
– அகிலேஷ் யாதவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, 266 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையப் போவது உறுதியாகி உள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் பாஜக பெரிய சரிவைக் கண்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 322 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது 266 சட்டப்பேரவைத் தொகுதிகளிலேயே அக்கட்சி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 42 தொகுதிகளை மட்டுமே வென்ற சமாஜ்வாடி கட்சி, தற்போது 132 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு, முதலமைச்சரும், பாஜக முதலமைச்சர் வேட்பாளருமான யோகி ஆதித்யநாத் மாலையில் வந்தார். அப்போது அவருக்கு ஏராளமானத் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதை அடுத்து தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இது ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீது அனைவருக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒரு கண் இருந்தது. பெரும்பான்மையுடன் எங்களை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் உ.பி., கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மீது கலர் பவுடைர வீசி மகிழ்ச்சியை யோகி ஆதித்யநாத் வெளியப்படுத்தினர். யோகி ஆதித்யநாத் அருகில் இருந்த நிர்வாகிகள் அவர் மீதும் கலர் பவுடரை பூசினர்.