அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..
600 இற்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலில் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்திருந்தது.
எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மாத்திரமே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இறக்குமதி கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்வைத்த பொருட்களின் பட்டியலிற்கமைய, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி பணப்பரிமாற்றத்திற்கான கொடுப்பனவை அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியை ரூபாவாக மாற்றும் போது ஒரு அமெரிக்க டொலருக்கு 20 ரூபாய் ஊக்க கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் பணம் அனுப்புவதற்கான பாதுகாப்பிற்கு மேலதிகமாக அதிக நன்மைகளைப் பெற முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.