பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான தொகையே இருப்பதாக மக்களுக்கான அறிவுசார் மன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எஞ்சிய கையிருப்பு யுவானில் இருப்பதாகவும், யுவான் நாணயத்தில் ஜேர்மனி மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் கிடைக்கும் பொருட்களில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் உற்பத்திச் செயற்பாட்டில் பல குறைபாடுகள் இருப்பதால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளும் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கையில் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாகவும், இது பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும், அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் பல துணை தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டு, உற்பத்தி செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.
அரசாங்கம் அந்நிய கையிருப்பை தவறாக நிர்வகிப்பதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.