புதுடெல்லி: உக்ரைனின் சுமி பல்கலைக் கழகத்தில் இருந்த இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைனில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ரஷ்யா கடந்த 14 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைனின் வடகிழக்கில் உள்ள சுமி நகரத்தில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. அந்த நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் சுமி நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவ, மாணவியரை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
சுமியில் தங்கியிருந்த இந்தியர்களை, ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்க கடந்த 7-ம் தேதி திட்டமிடப்பட்டது. ஆனால் உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இரு நாட்டு தலைவர்களும், ஒப்புக்கொண்டதுடன், அவர்கள் பத்திரமாக வெளியேறுவதில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உக்ரைன் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தார். ஜெனிவா மற்றும் உக்ரைனில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினருடனும், மாணவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மனி தாபிமான அடிப்படையில் மாணவர்கள் மற்றும் மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழித்தடத்தை வழி ஏற்படுத்தி தரும்படி மாஸ்கோ மற்றும் கீவ் நகரில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் பின்னர், சுமி நகரில் இருந்து பஸ்கள் மூலம் உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள போல்டோவா பகுதிக்கு இந்திய மாணவர்கள் பத்திரமாக நேற்று அழைத்து செல்லப்பட்டனர். இதனை மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அங்கிருந்து இந்திய மாணவர்கள் பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் கூறும்போது, “சுமி பல்கலை.யில் இருந்த இந்திய மாணவர்கள் அனைவரும் பத்திர மாக மீட்கப்பட்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் கிறோம். அவர்கள் தற்போது போல்டோவாவில் உள்ளனர்” என்றார்.
உக்ரைன் உதவி
இந்த நடவடிக்கைகளுக்கு உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா உள்ளிட்டோர் ஆதரவாக இருந்தனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிருங்லாவும் உக்ரைன், ரஷ்ய நாட்டுத் தூதர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
தொடக்கத்தில் ரஷ்ய எல்லைக்கு பஸ்களை இயக்கு வதற்கு உக்ரைன் நாட்டு டிரைவர் கள் மறுத்துவிட்டனர். பின்னர் வேறொரு அமைப்பு மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரி கிறது.
– பிடிஐ