வாஷிங்டன்: உக்ரைனில் ரஷ்யா உயிரி ஆயுதங்களை (Biological Weapons) பயன்படுத்தும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைனும், அமெரிக்காவும் உயிரி ஆயுதத் திட்டங்களில் ஈடுபடுவதாக பொய்ப் பிரச்சாரத்தை ரஷ்யா வேண்டும்மென்றே பரப்புகிறது. உக்ரைனில் தாங்கள் நடத்தும் கொடுமையான செயல்பாடுகளை மறைக்க ரஷ்யா, இந்தப் பொய்யை பரப்புகிறது. உக்ரைனில் உயிரி அயுதங்களை ரஷ்யாதான் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதில் நாம் கவனமா இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, மரியுபோல் மருத்துவமனையில், ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புடன் சேரவும், ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் பிடிவாதமாக இருந்து வந்தார். இது ரஷ்யாவுக்கு பாதகமான விஷயம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், நேட்டோவில் சேர்வதற்கு ஜெலன்ஸ்கி தீவிரம் காட்டி வந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலை ரஷ்யா தொடங்கியது.
இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிர் சேர்தங்கள் சேதங்கள் ஏற்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு சென்றடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பின் உறுப்பினராக சேர மாட்டேன். ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக சமரச பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.