உக்ரைன் மீது ரஷ்யா உயிரி தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான தாக்குதல் 15ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரனை கைப்பற்றும் அடுத்த கட்ட முயற்சியாக, ரசாயன ஆயுதங்களை வைத்தோ அல்லது உயிரி தாக்குதலையோ ரஷ்யா முன்னெடுக்கக் கூடும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அத்தோடு, அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனிலுள்ள ஆய்வகங்களில் உயிரி தாக்குதல் நடத்துவதற்கான கொடிய நோய்களை பரப்பும் கிருமிகள் ரகசியமாக உருவாக்கப்படுவதாக ரஷ்யா கூறுவதை முற்றாக மறுத்துள்ள அமெரிக்கா அது அபத்தமானது எனவும் கூறியுள்ளது.
ரஷ்யாவின் கூற்றை சீனா ஆதரித்துள்ளதற்கும் அமெரிக்கா கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தோ, சாக்குபோக்கு கூறியோ, ரஷ்யா தான் உக்ரைனில் பேரழிவை ஏற்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை பல முறை அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது எனவும் வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் படையின் எதிர்ப்பால் ரஷ்ய படையின் வேகம் குறைந்திருக்கிறதே தவிர அவர்கள் முற்றாக தடுத்து நிறுத்தப்படவில்லைஎனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.