மாஸ்கோ:
ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோபோவா கூறியதாவது:-
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். உக்ரைனை நாஜிக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.
பின்னர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் உக்ரைன் ராணுவத்தின் நாஜி ஆதரவு சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷியா தாக்குதல் நடத்துவதாகவும், சாதாரண உக்ரைன் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.