உத்தரகண்ட் மாநில வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துள்ளது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், உத்தரகண்டில் ஆட்சியை பிடிக்க, 36 இடங்கள் தேவை என்ற நிலையில்,பா.ஜ.க. பெரும்பான்மைக்கு தேவையானதை விட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கட்டிமா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்திர கப்ரியை விட சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் புஷ்கர்சிங் தாமி பின்தங்கினார்.
மேலும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ரவாத்தும் லால்குவா தொகுதியில் (Lalkuwa) தோல்வியை தழுவினார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை பா.ஜ.க. காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.