லக்னோ:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
பிற்பகலுக்குள் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகள் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடை பெறுவதையொட்டி, முக்கிய வாக்குப் பதிவு மையங்களில் மத்திய ஆயுத படை போலீசார், மாநில போலீசார் உள்பட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள், மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு நுழைவதற்கு முன்னதாக தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வாரணாசி கமிஷனரேட் பகுதி உள்பட 75 மாவட்டங்களிலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொரதாபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.