உபரி நிலங்களை பணமாக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்| Dinamalar

மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், என்.எல்.எம்.சி., எனப்படும் தேசிய உபரி நிலச் சொத்து நிறுவனம் துவக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத உபரி நிலங்களை விற்பனை செய்து பணமாக்க, என்.எல்.எம்.சி., என்ற நிறுவனம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்கள், கட்டடங்கள் சொந்தமாக உள்ளன. அவற்றில் பல நிலங்கள், கட்டடங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.இது போல உபரியாக, பயன்படுத்தாத நிலங்களை என்.எல்.எம்.சி., அடையாளம் கண்டு, அவற்றை விற்கவோ அல்லது முழுமையாக பயன்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

latest tamil news

இது, மத்திய அரசின் வருவாய்க்கு வழி வகுக்கும். அதுபோல, நலிவுற்று மூடப்படும் பொதுத் துறை நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டடங்களை கையகப்படுத்துவது, அவற்றின் வாயிலான வருவாயை பெருக்குவது உள்ளிட்ட பணிகளையும் என்.எல்.எம்.சி., மேற்கொள்ளும்.

மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், குஜராத்தின் ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச மையம் அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இந்த மையம் செயல்படும்.

இது, உலக சுகாதார நிறுவனமுடன் இணைந்து, உலகளவில் முதன் முறையாக பாரம்பரிய மருந்துகளுக்காக அமைக்கப்படும் மையமாகும்.

– நமது சிறப்பு நிருபர் –

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.