ரஷ்ய போரின் விளைவாக, உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை, ஓட்ஸ், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் என அனைத்தையும் தடைசெய்வதாக அந்த நாட்டின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது போரை கடந்த 24ம் திகதி தொடங்கியது.
இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற இன்னல்களை உக்ரைன் இனிவரும் நாள்களில் பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் மக்களின் உணவு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற இன்னல்களை தவிர்க்கும் விதமாக உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை, ஓட்ஸ்,திணை,சோளம், உப்பு, இறைச்சி மற்றும் பிற கால்நடை சம்பந்தப்பட்ட பால் பொருட்கள் ஆகிய அனைத்தும் தடைசெய்யப்படுவதாக அந்த நாட்டின் அமைச்சரவையில் கடந்த செய்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, உக்ரைனின் விவசாயக் கொள்கை மற்றும் உணவுத்துறை அமைச்சர் ரோமன் லெஷ்செங்கோ பேசுகையில், உக்ரைனில் எழுந்துள்ள இந்த மனிதாபிமான நெருக்கடி நிலை மற்றும், நாட்டின் உணவு தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
விவசாய தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Gro Intelligence ஆய்வின்படி, உலக அளவில் கோதுமை உற்பத்தியில் 30சதவிகித தேவை ரஷ்யா மற்றும் உக்ரைன் பூர்த்திசெய்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளின் விவசாய பொருள்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உக்ரைன் இருப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் போருக்கு முந்திய கோதுமை உற்பத்தியில் முதன்மை நாடாகளாக விளங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் இந்த போரால் கோதுமையின் விலை கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.