உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி அங்கு பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “நாங்கள் உத்தரப்பிரதேசத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவோம். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அனைத்து வாக்குறுதிகளையும், நிறைவேற்றி உத்தரப்பிரதேசத்தை மாஃபியா இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளது. எங்களின் திட்டங்கள் அனைவருக்குமானது. நாங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் என யாரையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நாங்கள் அனைவருக்கும் சேர்ந்து உழைத்தோம். மோடி மற்றும் யோகி தலைமையிலான அரசாங்கம் அனைவருக்கும் நன்மை செய்கிறது. உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்க உள்ளார்” என்று கூறியிருக்கிறார்.