லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் ஆகிறார். அந்தச் சிறப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் பெறுகிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தே தொடர்வார் என பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலமாக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் அம்மாநில முதலமைச்சர் ஆகிறார்.
பொதுவாக, ஒரு மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பர் அல்லது கட்சியின் தலைவரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். சில மாநிலங்கள் இந்த வழக்கத்திலிருந்து மாறுப்பட்டிருக்கின்றன. காரணம், அந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை என்ற ஒன்று இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த முறை முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டபோது, அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வராக அவர் பாரதிய ஜனதா கட்சியால் அறிவிக்கப்பட்ட பின்னர், சட்டமன்றத்தின் மேலவை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இந்த முறை அவர் கோரக்பூர் நகர சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். இதற்கு முன்பு கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 5 முறை அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவிற்கும் இந்தத் தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தலாகும். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் களம் கண்டார். ஆனால், இந்த முறையும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஆதித்யநாத் முன்நிறுத்தப்படவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையை பாஜக பெற்றுவரும் நிலையில், இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தே தொடர்வார் என பாஜக தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 15 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக, 1999-க்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் முதல்வராக பொறுப்பு வகித்திருந்தார். பாஜகவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் குப்தா 1999-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை மூலமாக முதலில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் முதல்வரானவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் சட்டமன்ற மேலவை உள்ளது. இதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மகாராஷ்ட்ராவின் உத்தவ் தாக்ரே ஆகிய இருவரும் சட்டமன்ற மேலவையின் மூலமாக முதல்வரானவர்கள்.