உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க மாற்றிவிட்டதாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது.
அதிகாரிகள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் வைத்து எடுத்து செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டது. இதையடுத்து பா.ஜ.க வாக்குகளை திருடிவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளின் பயிற்சிக்காக எடுத்து செல்லப்பட்டது என வாரணாசி ஆணையர் தீபக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வது போல வெளியான புகைப்படங்களை கூர்ந்து கவனித்தால், அதில் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் என குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயிற்சிக்காக எடுத்து செல்லும்போது அவற்றை பார்வையிட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கும் . மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். அதனால் வாக்கு எண்ணிக்கையில் எந்த விதிமீறல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.