சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.
ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.
அமரீந்தர் சிங் தனது பாட்டியாலா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோலியிடம் தோல்வியடைந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை எதிர்த்து ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் போட்டியிட்டார்.
பின்னர் அவர் தனது சொந்த ஊரான சங்ரூரில் அவர் தனது தாயார் ஹர்பால் கவுருடன் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மான் பேசியதாவது:
எனக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் எதிராக மற்ற கட்சிகள் ஒவ்வொரு தந்திரங்களையும் பயன்படுத்தினர். தனிப்பட்ட தாக்குதல்களை செய்தார்கள். கேலி செய்தார்கள். ஆனால் மக்கள் அவற்றையெல்லாம் நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை காட்டியுள்ளனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாமானியரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
படே பாதல் சாஹிப் தோற்றார், சுக்பீர் (பாதால்) ஜலாலாபாத்தில் தோற்றார். கேப்டன் பாட்டியாலாவில் தோற்றார். சித்து, மஜிதியாவும் தோற்றனர். சன்னி இரண்டு இடங்களிலும் தோற்றுவிட்டார். கேஜ்ரிவாலின் கணிப்புகளே இன்று உண்மையாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.