நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாய மக்களை தவறாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் படம் வெளியான நாள் முதல் வன்னியர் சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது இதற்கு நடிகர் சூர்யா பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வன்னிய சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை எந்தவித மன்னிப்பும் நடிகர் சூர்யா கேட்கவில்லை.
இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. வன்னிய சமுதாய மக்களை தவறாக சித்தரித்த ஜெய்பீம் படத்திற்கு மன்னிப்பு கேட்காத சூர்யாவின் படத்தை திரையிடக்கூடாது எனக் கூறி, பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள லக்கி திரையரங்கு முன் படத்தைத் திரையிடக் கூடாது எனக் கூறி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பேர் முற்றுகையிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ம.க-வைச் சேர்ந்த பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் குமரன், “தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினர் மீது தவறான சித்தரிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். ஆனால், மன்னிப்பு கேட்காமல் எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடக் கூடாது என பா.ம.க சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். அந்த வகையில் பெரியகுளத்திலும் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளரிடம் கூறியுள்ளோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து, திரையரங்கின் முன் 4 பேர் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.