சென்னையில் இன்று காலை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின், விழாவின்போது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். திமுகவில் இளைஞரணி என்று புதிய அணியை உருவாக்குவது குறித்தும், அதற்கு யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்தும் அப்போதைய மாவட்டச் செயலாளர்களிடம் எனது தந்தை கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன்.
தொடர்ந்து, 2007 இல் நெல்லையில் திமுக இளைஞரணி மாநாட்டின் போது மாநாடு கொடியை ஏற்ற யாரை அழைக்கலாம் என தந்தை கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் தங்கபாண்டியன் மகள் சுமதியை அழைக்க சொன்னார். சுமதியும் எவ்வித சங்கடமும் இன்றி கோடி ஏற்றி வைக்க வருகை தந்தார்.
சுமதி என்ற பெயரை தமிழச்சி என கருணாநிதி தான் மாற்றியதாகவும், அந்த பெயரில் தான் இளைஞரணி மாநாட்டு விளம்பரத்தை கொடுக்குமாறும் என்னிடம் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில், நாமக்கல் மாவட்டத்தில் திமுக கொடியேற்ற ஏற்ற நான் சென்ற போது, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கொடியேற்றி வைத்ததற்ககாக தன்னை கைது செய்தவர் தான் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகர் என்கிற தகவலை பகிர்ந்தார்.
இந்த திருமண விழாவில் ப.சிதம்பரம், சுப்ரியா சுலே, முத்தரசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.