சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை மொபைல் கடை நடத்திவரும் ஒருவர் தோற்கடித்துளளார். அதுவும், 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான பதௌரில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதியில் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளவர் பர்னாலா மாவட்டத்தில் உள்ள உகோகே கிராமத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் லப் சிங் என்பவர். 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையான மால்வாவில் உள்ளது பதௌர் தொகுதி. தனது ஆஸ்தான தொகுதியுடன் இந்த தொகுதியிலும் புதிதாக களம்கண்டார் சரண்ஜித். ஆனால் தற்போது தோல்வியை தழுவியுள்ளார். தனித் தொகுதியான இங்கு 2017லும் ஆம் ஆத்மியே வென்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சரண்ஜித் சிங்கை வீழ்த்திய லப் சிங், 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மொபைல் பழுதுபார்ப்பதற்கும் கடை வைத்துள்ள அவர், ஆம் ஆத்மி கட்சியில் முழுநேரமாக இணைந்த பிறகு, தொகுதி பொறுப்பாளராக இருந்தார். இதன்பின் அந்தக் கட்சியின் வட்டத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தவர், இப்போது எம்எல்ஏவாகவும் பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, லப் சிங் தனது வேட்புமனுவில், தனது சொத்தாக 2014 மாடல் ஹீரோ ஹோண்டா பைக் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வரும் லப் சிங்கின் தந்தை ஒரு ஓட்டுநர். கடந்த 2017லேயே இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டியது. ஆனால் ஒருசில காரணங்களால் அவருக்குப் பதிலாக தௌலா என்பவர் வேட்பாளராக்கப்பட்டார்.
இதனிடையே, தனது வெற்றிக்குறித்து பேசியுள்ள லப் சிங், “எனது லாஜிக் இதுதான். முதல்வர் தனது சொந்த தொகுதியான சம்கவுர் சாஹிப்பில் ஏதேனும் வளர்ச்சிப் பணிகளைச் செய்திருந்தால், அவர் ஏன் எனது தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பதௌர் ஒரு தொகுதி அல்ல, அது எனது குடும்பம். பதௌரின் 10 கிராமங்களின் பெயர்கள் கூட முதல்வருக்கு தெரியாது. அவரை பொறுத்தவரை இது அவருக்கு ஒரு தொகுதி.
எதுவும் செய்யவில்லை என்பதால் தானே தொகுதி மாறியுள்ளார். ஆம் ஆத்மிக்கு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். தொகுதி வாக்காளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எனது பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆம் ஆத்மியின் மகத்தான வெற்றிக்கு பின் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “சரண்ஜித் சிங்கை தோற்கடித்தது யார் தெரியுமா? மொபைல் பழுதுபார்க்கும் கடையில் பணிபுரியும் ஆம் ஆத்மி வேட்பாளர் லப் சிங் உகோகே” என்றுள்ளார்.