கோவா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.
கோவா மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை.
இந்நிலையில் ஆளும் பாஜக மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, 3 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு, இன்னும் 2 இடங்கள் மட்டுமே தான் தேவை.
இந்நிலையில், தலைநகர் பனாஜியில், முதலமைச்சரும், பாஜக முதலமைச்சர் வேட்பாளருமான பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலம் வாரியாக பிரசாரம் செய்தும் எனது சொந்த தொகுதிக்கு செல்ல முடியாததால் எனக்கு இது மிகவும் சவாலாக இருந்தது. எனக்காக எனது தொகுதியில் பாஜக தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் நாங்கள் (பாஜக) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளோம். இது பெரிய விஷயம். கிட்டத்தட்ட 20 இடங்களில் பாஜக வெற்றி உறுதி. 3 பேர் எங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பாஜக ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.