புதுடெல்லி:
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 273 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல் மந்திரி ஆகிறார். சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மாநிலத்தில் முதன்முதலாக தேர்தல் களத்தில் குதித்த ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தோல்வியை சந்தித்தது. அக்கட்சி ஒரு சதவீத வாக்குகளைக்கூட பெற முடியவில்லை.
இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. உத்தர பிரதேச மக்கள் பா.ஜ.க.விற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கட்சி வலுவடையும் என நம்புகிறோம். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி என தெரிவித்தார்.