கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்றிரவு கிராமசாந்தியுடன் தொடங்கியது. இன்று கொடியேற்றத்தையொட்டி கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரம் முன்பு அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட அனைத்து உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளினர்.
கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, கொடிமரத்துடன் சுற்றப்பட்டு, தர்ப்பைப் புல்கள் வைத்து கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 15-ம் தேதி சுவாமி அம்பாள் அப்பிபாளையம் எழுந்தருளல். இரவு யானை வாகனம். அப்பிபாளையத்திலிருந்து கோயிலுக்கு சுவாமி எழுந்தருளியவுடன் அபிஷேக ஆராதனையும் நடைபெறவுள்ளது.
வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு புஷ்ப விமான காட்சியும் நடைபெறவுள்ளது. வரும் 18-ம் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும் திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நடைபெறும்.
வரும் 19-ம் தேதி ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு அபிஷேகம், தரிசனம், தீர்த்தவாரியும், இரவு ரிஷப வாகனத்துடன் விடியலில் கொடியிறக்கம் செய்யப்படும். 20ம் தேதி விடையாற்றி உற்சவம் (ஆளும் பல்லாக்கு), 21ல் ஊஞ்சல் உற்சவம், 22ல் பிராயச்சித்த அபிஷேகம், ஸ்ரீசண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவுடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் எம்.சூரியநாராயணன், செயல் அலுவலர் ஆர்.சங்கரன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.