வாக்கெடுப்பு மூலம் தேர்வு:
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது. பொதுமக்களிடம் மொபைல் நம்பரை கொடுத்து அதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
“வாக்கெடுப்பு நடத்தாமலேயே முதல்வர் வேட்பாளராக உங்களை அறிவிக்கிறேன்” என்று அர்விந்த் கெஜ்ரிவால் பக்வந்த் மானிடம் தெரிவித்தாராம். ஆனால், `அந்த முடிவை மக்களிடம் விட்டுவிடுங்கள்’ என்று பக்வந்த் மான் சொல்லிவிட்டார். அதன் பிறகே கெஜ்ரிவால் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். பக்வந்த் மான் அரசியல் கட்சிக்கு வருவதற்கு முன்பே பஞ்சாப் மக்களிடம் மிகவும் அறிமுகமானவர் ஆவார். மிகவும் எளிமையான பக்வந்த் மான் காமெடி டிவி நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார்.
அரசியல் அறிமுகம்…தோல்வி… வெற்றி!
தற்போது டிவியில் காமெடி நிகழ்ச்சி நடத்தும் கபில் சர்மா போன்று பக்வந்த் மானும் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை எப்போதும் சிரிக்க வைத்து அவர்களிடம் பிரபலமானவர். ஜூக்னு கெஹந்தா ஹை மற்றும் ஜுக்னு மஸ்த் மஸ்த் ஆகிய இரு நிகழ்ச்சிகள் பக்வந்த் மானை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 1973-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி பிறந்த பக்வந்த் மான், 2012-ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த புகழை பயன்படுத்தி மக்கள் கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதன் பிறகு ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி டெல்லியில் ஆட்சியை பிடித்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் பக்வந்த் மான் 2014-ம் ஆண்டு சேர்ந்தார். அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சங்ருர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மோடி அலை வீசிய போதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
`குடிகாரன்’ சர்ச்சை:
மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்று இருந்தாலும் அதிகமாக மது அருந்தக்கூடியவர் என்று அனைவராலும் குற்றம் சாட்டப்பட்டார். குடிகாரர் என்றே சிலர் அவரை அழைத்தனர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது கூட மது அருந்திவிட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. மதுவால் தனக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதை உணர்ந்த பக்வந்த் மான் 2019ம் ஆண்டு இனி தான் மது அருந்தமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரின் இந்த உறுதிமொழியை பாராட்டிய அர்விந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மக்களுக்காக செய்யப்பட்ட மிகப்பெரிய தியாகம் என்று அதனை குறிப்பிட்டார்.
அரசு பள்ளி ஆசிரியரின் மகனான பக்வந்த் மானை அவரின் தந்தை ஆசிரியராக்கி பார்க்கவேண்டும் என்றே விரும்பினார். ஆனால் மானின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. எப்போது கலகலவென சிரித்து காமெடி, கிண்டலுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த பக்வந்த் மான் அதன் மூலமே புகழ் பெற்று பஞ்சாப்பின் முதல்வர் வேட்பாளராகி இருக்கிறார்.
பஞ்சாப் எல்லையில் மாசுபட்ட நிலத்தடி நீரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக மான் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமாக வெற்றி பெறச்செய்ததிலும் பக்வந்த் மான் முக்கிய பங்கு வகித்தார். ஊழல் விவகாரத்தில் பக்வந்த் மான் எந்த வித சமரசமும் செய்து கொள்ள மாட்டார் என்கிறார்கள்.
பக்வந்த் மான் தனது மனைவியை பிரிந்து 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். நடந்து முடிந்துள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சியமைக்கிறது. மக்களால் தேர்தலுக்கு முன்பே தேர்வு முதல்வர் வேட்பாளராக செய்யப்பட்ட பக்வந்த் மான் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.