பனாஜி:
கோவா மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகின்றன. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் மூன்று தம்பதியர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஷ்வஜித் ரானே மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் வால்போய் மற்றும் போரியம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். விஷ்வஜித் 8085 வாக்குகள் வித்தியாசத்திலும், திவ்யா 13943 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மைக்கேல் லோபோ அவரது பாரம்பரிய தொகுதியான காலன்குட் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது மனைவி டெலிலா காங்கிரஸ் சார்பில் சியோலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் அடானசியோ மான்செரேட், பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர், தலெய்காவ் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் கண்டோல்கர்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கவிதா கண்டோல்கர், அவரது கணவர் கிரண் ஆகியோர் முறையே திவிம் மற்றும் அல்டோனா தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர். இதேபோல் பெனாலிம் தொகுதியில் போட்டியிட்ட சர்ச்சில் அலேமாவோ, நாவலிம் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகள் வாலங்கா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.