பனாஜி: கோவா தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநில வைபோல் தொகுதி வேட்பாளர் விஸ்வஜித் ரானே ஆனந்தக் கண்ணீர் சிந்தி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பகல் 12 மணி நிலவரப்படி அங்கு பாஜக 18, காங்கிரஸ் 11, திரிணமூல் 4, ஆம் ஆத்மி 3, சுயேச்சைகள் 4 என்று முன்னிலை வகிக்கின்றன. தொங்கு சட்டசபை என்று கணிக்கப்பட்ட கோவாவில் 18 இடங்களில் பாஜக முன்னிலை வகித்துவருவதால் சுயேச்சைகள் ஆதரவோடு எளிதில் மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக முன்னிலை குறித்து வைபோல் தொகுதி வேட்பாளர் விஸ்வஜித் ரானே, “இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடியால் சாத்தியமானது. வைபோல் தொகுதியில் நான் முன்னிலை பெற்றதற்கும் பிரதமர் என் மீது கொண்ட நம்பிக்கையே காரணம். மாநிலம் முழுவதும் மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர்.
காங்கிரஸ் மக்களை முட்டாளாக்கி வந்ததை மக்களே இப்போது புரிந்துகொண்டுள்ளார்கள். கோவா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு என நிறைய நலத்திட்டங்களை பாஜக நிறைவேற்றியுள்ளது. அதனாலேயே மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர்” என்று ஆனந்தக் கண்ணீர் பெருக விஸ்வஜித் ரானே தெரிவித்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் விஸ்வஜித் ரானேவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விஸ்வஜித் ரானேவின் மனைவி தேவியா விஸ்வஜித் ரானே போரிஎம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவர் அத்தொகுதியில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.