சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்று நடைப்பெறும் முதல் மாநாடு இது. உங்கள் அனைவரையும் மாநாட்டில் சந்திப்பதில் மகிழ்ச்சி. 2 கொரோனா அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு முற்றுப்புள்ளி வைத்தள்ளோம் அதற்கு நீங்களே முக்கிய காரணம்.
அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது.
தடுப்பூசி என்ற மக்கள் இயக்கத்திற்கு நீங்கள் அளித்த ஒத்துழைப்பு பாராட்டிற்குரியது. வரலாறு காணாத மழையின் போது மாவட்ட நிர்வாகம் இரவு பகல் பாராமல் சிறப்பாக செயல்பட்டது.
மாநில வளர்ச்சி கொள்கை குழு உருவாக்கியுள்ளோம் நிதி நுட்ப கொள்கை , ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை, வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, கொள்கை அரசு மக்கள் நல சேவை அரசை ஒரு சேர நடத்த வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48 என அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்தியாவை திரும்பி பார்க்க செய்துள்ளோம்.
மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடைபெற உள்ளது.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தை தெரிந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற உள்ளது.
பசுமைப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீத ஆக உயர்த்த வேண்டும். இந்த இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு மிக முக்கியம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
பொதுமக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவரை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக்கூடாது.
சாலை விபத்துக்கள் அதிகம் நடைப்பெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தமளிக்கிறது.
மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய, வட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய, வட்டார அளவில் களையப்பட வேண்டிய சிற்றூர் அளவில் செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதன் காரணமாக மக்கள் கவலைகள் நிறைந்த இதயத்தோடு தீர்வுகளை எதிர்பார்த்து தலைமைச் செயலகத்திற்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். இவற்றில் கவனம் செலுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக போதைப்பொருள் குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. மதத்திற்கு எதிராக ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் வழிகாட்டியாக மாவட்ட ஆட்சியர்கள் திகழ வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறி மாவட்ட ஆட்சியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
எனது கனவு திட்டத்தை உங்களை நம்பி நான் ஒப்படைக்கிறேன்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் வெற்றி என்பது மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொருத்து அமையும். அனைவரும் நேர்மையாக ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையோடு முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.
மக்களுக்கு பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவிக்க வேண்டும். புதிய முன்னெடுப்புகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.