திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் நடைபெற்ற திருமண விழாவில், மு.க. அழகிரி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மு.க. அழகிரியைப் பார்த்த அமைச்சர்கள், திமுக விஐபிகள் அனைவரும் மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர்.
தென் சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுக பிரமுக டாக்டர் மகேந்திரன் ஆகிய 2 திமுக விஐபிகளும் சம்பந்தியாகியிருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக விஐபிகள் பலரும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்ல, தமிழச்சியின் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி மனைவி, மகன் மருமகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன் சகோதர்தான் அமைச்சர் தங்கம் தென்னரசு என்பதால், மணமகளுக்கு தாய்மாமன் என்கிற முறையில் திருமண விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்துள்ளார்.
தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் மு.க. அழகிரிக்கு மிகவும் பிடித்தமானவர், குடும்ப நண்பர் என்பதால் அவருடைய மகள் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்துக்கு, அழகிரி தனது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்தார். அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மு.க. அழகிரியைப் பார்த்த திமுக அமைச்சர்கள், அருகே வந்து மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் மு.க. அழகிரி பதிலுக்கு வணக்கம் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் நீண்ட நேரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி குடும்பத்துடன் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்திவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தார். திமுக அமைச்சர்கள், விஐபிகள் மரியாதையுடன் வணக்கம் வைத்து மு.க.அழகிரியை நலம் விசாரித்தது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். ஆனால், இந்தமுறையும் சகோதரர்கள் மு.க. அழகிரியும் மு.க. ஸ்டாலினும் சந்திப்பு மட்டும் மிஸ்ஸிங்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“