லக்னோ: “உத்தரப் பிரதேசத்தில் கிடைத்திருக்கும் வெற்றி, சாதி – மத அரசியலுக்கு சமாதி கட்டியிருப்பதுடன், மக்கள் வளர்ச்சியின் பக்கம் இருப்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகிறார்.
லக்னோவில் கட்சித் தொண்டர்களிடம் வெற்றி உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “அனைவரது கண்களும் உத்தரப் பிரதேசத்தின் மீதே இருக்கிறது. நம்மை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் தலைமையில் நாம் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்டில் ஆட்சி அமைக்கிறோம்.
இந்த வெற்றியின் மூலம் உத்தரப் பிரதேச மக்கள், சாதி – மத அரசியலை குழிதோண்டி புதைத்துள்ளனர். வாக்குபதிவு எந்திரத்தில் குளறுபடி என்ற வதந்தி துடைத்தெரியப்பட் இருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் மக்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.
இன்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். முதல்முறையாக ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல், வாக்கு எண்ணிக்கை சுமுகமாக முடிந்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடியின் ஆட்சி மற்றும் அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் மீண்டும் அவர்களுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளனர்” என்று யோகி தெரிவித்தார்.