லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைக்கிறது. மாலை 7 மணி நிலவரப்படி 109 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 143 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.
லக்னோவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது, பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் உத்தரபிரதேசத்தில் பாஜக, அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (எஸ்) மற்றும் நிஷாத் கட்சி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக இன்று பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மோடியின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்ததன் மூலம், சாதி, மத அரசியலை மக்கள் குழிதோண்டி புதைத்துவிட்டனர்.
பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக உழைத்துள்ளது.
அனைவரின் பார்வையும் உத்தர பிரதேசத்தின் மீதுதான் இருந்தது. எங்களை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம்” என்றார் யோகி ஆதித்யநாத்.