சாதி மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக இருப்பது சமூக வலைதளங்கள் தான் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் நிகழும் குற்றங்களை தடுப்பது காவல்துறையின் பெரிய பணியாக இருக்கப்போவதாக தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 3 நாள் மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டேன் என்றும் மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவோரை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
வாரந்தோறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான நுண்ணறிவுப் பிரிவின் தகவல்கள் குறித்து கலந்தாலோசிக்க ஆட்சியர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் நலம், சமுதாய நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டியது போலீசாரின் கரங்களில் தான் உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.