ஐந்தாண்டுகள் கடந்தும் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது கடந்த 2016-ல் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 1 கோடியே 51 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி சிம்பு நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக கூறி அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது 1,080 நாள்கள் ஆகியும் வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்யாததால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தொகையை வரும் 31-ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறார்.
இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமியிடம் பேசினேன்.
“கோர்ட் ஆர்டர் இன்னமும் எங்க கைக்கு வரல. இது 2017-ல்ல விஷால் தலைவராக இருந்துபோது போடப்பட்ட வழக்கு. அவங்க பதில் சொல்லாம இருந்துட்டாங்க. மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் உள்ள பிரச்னையில அந்தச் சமயத்துல தயாரிப்பாளர் சங்கத்தையும் ஒரு பார்ட்டியா சேர்த்திருக்காங்க. அந்தச் சமயத்துல சங்கமும் ரெஸ்பான்ஸ் பண்ணல. மூணு வருஷமா சங்கம் பதிலளிக்கலைனு சொல்லித்தான் அபராதம் விதிச்சிருக்காங்க. அந்தச் சமயத்துல சங்கத்தை அரசாங்கம் அண்டர்டேக் பண்ணியிருந்தது. எஸ்.ஓ. பீரியட்ல இருந்ததால, அப்ப நிர்வாகம்னு எதுவும் கிடையாது. அந்த டைம்ல நாங்க பதில் சொல்லலைனு அபராதம் விதிச்சிருக்காங்க. நாங்க பதில் சொல்லியிருக்கோம். கோர்ட் ஆணை கைக்கு வந்த பிறகு, எங்க வழக்கறிஞர் மூலம் விரிவா பதில் சொல்வோம்” என்று தெரிவித்தார் முரளி.